4 மனைவிகள்; கள்ளக்காதலி எரித்து கொலை - போலீஸ்காரரின் ஷாக் பின்னணி
பெண்ணை கல்லால் அடித்து தீ வைத்து எரித்துக் கொலை செய்த முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடி
திருப்பூர், உத்தமபாளையம் வட்டமலை அணைப் பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தது. இதனைக் கால்நடை மேய்க்கச் சென்றவர்கள் கண்டு, போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடினர். முதற்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த வடிவுக்கரசி எனத் தெரியவந்தது.
அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமாக பழனி அ.கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சங்கர் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர் காவலராகக் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.
பெண் கொலை
அவருக்கு 4 மனைவிகள், 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் திருமணத்தை மீறிய உறவில் பெண் தோழிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் சடலமாகக் கிடந்த வடிவுக்கரசியும் ஒருவர். அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி சங்கர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் தனது உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி சங்கரிடம் கொடுத்துள்ளார் வடிவுக்கரசி. நாளடைவில் “அரசு வேலை வாங்கிக்கொடு, இல்லையெனில் உறவினர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடு” என வடிவுக்கரசி வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர் வடிவுக்கரசியை பணம் தருவதாக அழைத்து வட்டமலைக்கரை அணை ஓடையின் மேல் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மதியம் அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் அருகே கிடந்த கல்லால் வடிவுக்கரசியின் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.
மேலும், 6 பவுன் தங்க நகைகளைப் பறித்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.