ஓரம்கட்டப்பட்ட அஸ்வின்: அறிவு இருக்கா இல்லையா..? - முன்னாள் வீரர் காட்டம்
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை முன்னாள் வீரர் மைக்கெல் வான் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.
லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த ரவிச்சந்திர அஸ்வின், நான்காவது போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆடுகளமும் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், ஜடேஜா, இஷாந்த் சர்மா போன்றவர்கள் கடந்த போட்டியில் சொதப்பியதாலும், அஸ்வினுக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என மொய்ன் அலி போன்ற இங்கிலாந்து வீரர்களே தெரிவித்திருந்தனர். டெஸ்ட் போட்டிகளில் தலைசிறந்து விளங்கும் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தயாராக இருப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டனும் அறிவித்திருந்தார்.
பெரும்பாலான முன்னாள் வீரர்களும் அஸ்வினுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றே கணித்திருந்ததால், அஸ்வின் நான்காவது போட்டியில் விளையாடுவது 95% உறுதி என்றே ரசிகர்கள் நம்பியிருந்தனர், ஆனால் இந்திய அணியோ சம்பந்தமே இல்லாமல் உமேஷ் யாதவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்து, அஸ்வினை மீண்டும் புறக்கணித்துள்ளது.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்தும் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் இந்த முடிவு முட்டாள்தனமானது என்றும், விராட் கோலி வேண்டுமென்ற அணியில் அரசியல் செய்து வருகிறார் அவரை உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பெரும்பாலான முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் முடிவை கடினமான வார்த்தைகளை பிரயோகிக்காமல் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கெல் வானோ மிக கடுமையாக இந்திய அணியின் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.
இது குறித்து மைக்கெல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “அஸ்வின் புறக்கணிக்கப்படுவது தான் நாம் பார்த்ததில் மிகப்பெரும் புறக்கணிப்பு. 413 விக்கெட்டுகளும், 5 சதங்களும் அடித்துள்ள ஒருவருக்கு 4 போட்டியிலும் விளையாட வாய்ப்பு இல்லை, முட்டாள்தனம்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
The non selection of @ashwinravi99 has to be greatest NON selection we have ever witnessed across 4 Tests in the UK !!! 413 Test wickets & 5 Test 100s !!!! #ENGvIND Madness …
— Michael Vaughan (@MichaelVaughan) September 2, 2021