முன்னாள் அமைச்சரின் மகன் மீது பாய்ந்தது குண்டாஸ்

Son Act Ex Minister Gundas
By Thahir Dec 16, 2021 10:50 AM GMT
Report

தூத்துக்குடியில் முந்திரி லாரி கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் மகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த லாரியை,

கடந்த நவம்பர் 26-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் வைத்து TN 69 BL 5555 என்ற காரில் வந்த நபர்கள் வழிமறித்து கடத்தி சென்றனர்.

இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஹரி (40) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில்,

தூத்துக்குடி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முந்திரிபருப்பு லாரியை கடத்தி சென்ற முன்னாள் அமைச்சர் சி.த‌.செல்லப்பாண்டியன் மகனான ஞானராஜ் ஜெபசிங் ,

பிரையண்ட் நகரை சேர்ந்த விஷ்ணுபெருமாள், பாண்டி , மாரிமுத்து, செந்தில்முருகன் , பாளையங்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் , மனோகரன் ஆகிய 7 பேரையும் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், கடத்தப்பட்ட ரூ.1கோடியே 10 லட்சம் மதிப்பிலான முந்திரி பருப்பு, ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தவழக்கில், கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய அனுமதிகோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முந்திரி லாரி கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 183 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.