சிறையில் சொகுசு வசதி - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் சோதனையில் கண்டுபிடித்தனர்.
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கடந்த 20ஆம் தேதி பெங்களூரில் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மணிகண்டன் சிறையினுள் ஏசி செல்போன் சார்ஜர் சோபா என சொகுசு வசதிகளுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை சில சிறை அதிகாரிகளே ஏற்படுத்தி கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி தலைமையில், குழு ஒன்று, திடீரென சைதாப்பேட்டை கிளைச் சிறையில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் மொபைல், ஏசி யூனிட், சோபா, மொபைல் சார்ஜர் உள்ளிட்ட சகல வசதிகளோடு அமைச்சர் மணிகண்டன் இருப்பதை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக போட்டோ ஆதாரங்களுடன் உயரதிகாரிகள் அறிக்கை சமர்பித்து மணிகண்டனை புழல் சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, மணிகண்டனை புழல் சிறைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டனர்.