சட்டப்பேரவைல எதுக்கு கோடநாடு விவகாரம் பேசனும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆத்திரம்!
கொடநாடு விவகாரம் அவசரமாக விவாதிக்க வேண்டிய ஒன்றா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான துறைகள் வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், கொடநாடு கொலை விவகாரம் தற்போது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் கொடநாடு விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்க ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை பட்டினபாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிப்பது மரபை மீறியது என்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரத்தை சட்டமன்றத்தில் பேசக்கூடாது என கூறினார்.
மேலும் சட்டமன்றத்தில் விவாதிக்க ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன, அப்படியிருக்க கொடநாடு விவகாரம் அவசரமாக விவாதிக்க வேண்டிய ஒன்றா? என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி தலைவருக்கு மன ரீதியான துன்புறுத்தலை திமுக அரசு அளிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.