"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

tamil nadu ex minister jayakumar talks about dmk
By Swetha Subash Dec 26, 2021 09:30 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

திமுக அரசு ராஜேந்திர பாலாஜியை தேசதுரோகி போல் தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சுனாமியால் இறந்தவர்களுக்கு 17-ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

2004 ஆம் ஆண்டு வீசிய சுனாமி பேரலையால் ஏற்பட்ட சேதம் என்றும் மறக்க முடியாதது சுனாமி ஏற்பட்ட காலத்தில் அப்போதைய அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுவரை தலைமறைவாக இருப்பது குறித்த கேள்விக்கு,

ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே அவர் ஒரு குற்றவாளி இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு தேசத்துரோகி போல தனிப்படைகள் அமைத்து எதற்கு தேடுகிறார்கள் என்று தான் புரியவில்லை என்றார்.

மேலும் ராஜேந்திர பாலாஜி அதிமுகவை சேர்ந்தவர் என்பதாலேயே திமுக பழிவாங்குகிறது என்று குற்றம் சாட்டினார். அதிமுக பெரிய தவறு செய்தால் கூட திமுக தனிப்படை அமைப்பார்கள் ஏன் ராணுவத்தை கூட இறக்குவார்கள் என கூறிய அவர்,

அதிமுக ஆட்சியின் போது மட்டுமே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் காலனியை காட்டியது குறித்த கேள்விக்கு திமுக ஆட்சியில் எல்லாம் ஒழுங்காக நடந்தால் எல்லோரும் ஒழுங்காக இருப்பார்கள் ஒழுங்காக நடக்க வில்லை என்றால் இதுபோன்று காலணிகள் தான் வந்து பாயும் என்றார்.

தமிழ் வளர்ச்சிக்கு திமுக எதுவும் செய்யவில்லை நாங்கள் நடத்திய உலக மாநாடு தான் தமிழ் வளர்ச்சி மாநாடு திமுக நடத்திய செம்மொழி மாநாடு அவர்களின் குடும்ப மாநாடு என்று விமர்சித்தார்.