நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் : மடியில் கனம் இல்லை - ஜெயக்குமார் பேட்டி
சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி சென்றிருந்த நிலையில் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத், சித்ராவின் மரணத்தில் பிரபல அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் எனவும் ஹேம்நாத் தெரிவித்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நடிகை சித்ரா தற்கொலையில் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை எனவும் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.