பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்கிரபுத்தி கொண்டவர்கள் – நாராயணசாமி பேட்டி
பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று முந்தினம் தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிப்பதாக நேற்று முந்தினம் தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து பலரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள புதுச்சேரி முன்னாள் முதலமைவச்சர் நாராயணசாமி, ராஜீவ் காந்தி கொலையாளிகளை அவரது குடும்பத்தார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது தங்களுக்கு மன வேதனை அளிப்பதாக கூறிய அவர் முன்னாள் பிரதமரை கொன்றவர்கள் விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது என்று கூறினார்.
மேலும் அவரிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிவாளனை கண்டுபிடித்து வரவேற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.