ஈ.பி.எஸ். மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்கப் பிரச்சனை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சேலத்தில் அவர் முகாமிட்டிருந்தார். நேற்று முன்தினம் ஓமலூரில் நடந்த சேலம் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், பேசும்போது, தனக்கு வயிற்று வலி இருக்கிறது, அதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் சென்னை திரும்பிய அவர், இன்று காலை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்து இன்று மதியம் அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.