முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பறந்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் - அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்தியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தல் முடிவில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156. வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் தென்னரசை விட 66 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு - 43,923 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மேனகா நவநீதன் -10,827 வாக்குகளும், தேமுதிகவைச் சேர்ந்த எஸ்.ஆனந்த் -1,432 வாக்குகளும் பெற்றனர். இதில் அதிமுக வேட்பாளர் டெபாசிட் தொகையை பெற்றார் .
முதலமைச்சருடன் சந்திப்பு
மேலும் இந்த இடைத்தேர்தலில் போட்டியில் 77 வேட்பாளர்களில் 75 பேர் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர். இதில் கடந்த முறை நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை கூட இந்த முறை பெறவில்லை.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழக்கினார்.
இதையடுத்து இன்று காலை சென்னை வந்த அவர் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்தார் பின்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை அறிவாலயம் சென்ற அவர்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.