யாரால் தடுக்க முடியும்? அனைவரும் ஒருநாள் இறக்க தான் வேண்டும் - போலே பாபா சர்ச்சை பேட்டி!
அனைவரும் ஒருநாள் இறந்து தான் ஆக வேண்டும் என போலே பாபா பேசியுள்ளார்.
போலே பாபா
உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து வெளியேறும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 131 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சை பேட்டி
இதற்கிடையில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.
இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்த சம்பவம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. ஆனால் நடப்பதை யாரால் தடுக்க முடியும்.
பூமியில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்துதான் ஆகா வேண்டும்.எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பத்தை வைத்து எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள்.
கூட்டத்தில் விஷத் தன்மையுள்ள திரவம் தெளிக்கப்பட்டது. அதை நேரில் கண்ட சிலர் எங்களது வக்கீலிடம் அதை உறுதி செய்து வாக்குமூலம் அளித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.