சூயஸ் கால்வாயை முடக்கிய எவர்கிவன்: ரூ.7,000 கோடி நஷ்டஈடு கேட்கும் எகிப்து!
உலகின் மிகவும் பிஸியான நீர்வழித் தடங்களில் சூயஸ் கால்வாயும் ஒன்று. இங்கு கடந்த வாரம் எவர்கிவன் எனும் கப்பல் தரை தட்டி நின்றது. இதனால் இந்த பாதையில் ஆறு நாட்கள் கப்பல் போக்குவரத்து முடங்கியது. ஆறு நாட்களாக எந்த கப்பல்களையும் செல்ல விடாமல் முடக்கிய எவர்கிவன் கப்பலிடம், சூயஸ் கால்வாய் நிர்வாகம் 7300 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எகிப்து நாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கை நீர் பாதை தான் சூயஸ். 193 கிமீ நீளம் கொண்ட சூயஸ் கால்வாய், வழியாக நாள் ஒன்றுக்குக் குறைந்தது 50 முதல் 97 வரையிலான சரக்கு கப்பல்கள் கடந்து செல்கின்றன என்று தரவுகள் தெரிவிக்கிறது.
கடந்த 23-ம் தேதி சூயஸ் கால்வாய் வழியாகச் சீனாவிலிருந்து, நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்கு சென்றுகொண்டிருந்தது எவர்கிவன் கப்பல். அப்போது, எதிர்பாராமல் வீசிய காற்றால் கப்பல் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது. மிக கடுமையான போராட்டத்திற்குப் பின் எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டு சூயஸ் கால்வாயில் போக்குவரத்து திரும்பியது.
இந்நிலையில், ஆறு நாட்களுக்கு மேலாகப் பாதையை முடக்கியது மற்றும் மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சூயஸ் நிர்வாகம், 7300 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.