"இதுவும் கடந்து போகும். நம்பிக்கையுடன் இருங்கள் கோலி" - பாபர் அசாம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்.
அவரின் ட்வீட் இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
வலிமை வாய்ந்த விராட் கோலி
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி.
கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து பார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி.
சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,709 ரன்களை எடுத்துள்ளார். இருந்தும் இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க தடுமாறி வருகிறார்.
அதனால் அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்தை எடுத்து வைத்து வருகின்றனர்.
அதில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர். இங்கிலாந்து அணிக்கு எதிராக வியாழன் அன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார் கோலி.
நம்பிக்கையுடன் இருங்கள் கோலி
இதனையடுத்து "இதுவும் கடந்து போகும். நம்பிக்கையுடன் இருங்கள் கோலி" என ட்வீட் செய்துள்ளார் பாபர். அதோடு அதில் கோலியும், அவரும் இணைந்து நிற்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் களத்தில் பலப்பரீட்சை செய்யும் நேரமெல்லாம் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
களத்திற்கு வெளியே இரு அணி வீரர்களுக்கும் இடையே இருக்கும் ஆத்மார்த்தமான நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது பாபரின் ட்வீட்.