எட்டுமனூர் தொகுதியில் சீட் வழங்காத விரக்தியில் மொட்டையடித்துக்கொண்ட லத்திகா சுபாஷ்!
கேரள மாநிலத்தில் உள்ள எட்டுமனூர் தொகுதியில் சீட் வழங்காததால் விரக்தியில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தலையை மொட்டையடித்துக் கொண்டார் மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் லத்திகா சுபாஷ். இதனையடுத்து அவர் சுயேட்சையாகப் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸிலிருந்து விலகி, லத்திகா சுபாஷ் சுயேட்சையாக எட்டுமனூர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயமாகக் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும்.
ஆனால், எட்டுமனூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படாமல் கூட்டணிக் கட்சியான, கேரள காங்கிரஸ் (ஜோஸப்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்சி சார்பில் பிரின்ஸ் லூகோஸ் போட்டியிட உள்ளார். கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் போட்டியிட உள்ளன. இதில் முதல்கட்டமாக 86 வேட்பாளர்களைக் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்துள்ளது.
இதில் 10 பெண் வேட்பாளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதில் கோட்டயம் மாவட்டம் எட்டுமனூர் தொகுதியில் மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் லத்திகா சுபாஷுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால், நேற்று காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகத்தின் முன் அமர்ந்து தலையை மொட்டையடித்துக்கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனையடுத்து, லத்திகா சுபாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் தீர்க்கமான முடிவு எடுக்கப் போகிறேன்.
என் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளுடன் ஆலோசித்த பின், என்ன முடிவு என விளக்கமாக அறிவிப்பேன். வேறு எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன். இப்போது ஏதும் தெரிவிக்க இயலாது என்றார். லத்திகா சுபாஷ் சுயேட்சையாக போட்டியிட்டால் நிச்சயமாக காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று கூறுகையில் " லத்திகா சுபாஷ் குறித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
எட்டுமானூர் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவருக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
இதனால், கோட்டயம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி சதவீதம் பாதிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.