போதும்... நீங்கள் ஆட்சி செய்தது.... ஓபிஎஸ், இபிஎஸ் உடனே பதவி விலக வேண்டும் - சுவரொட்டியால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.
சசிகலாவை இணைக்கும் குரல் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் நேற்று, சேலத்தில் உள்ள வீட்டில் எடப்பாடி ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில், தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக செயலாளர் சையது கான் தலைமை தாங்கியதாக தகவல் வெளியாயின.
இதற்கிடையில், வரும் மார்ச் 5ம் தேதி தேனி அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை குறித்து பேசப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம், பெங்களூரு சாலை, சேலம் சாலை, காவேரிப்பட்டணம் பனகல் தெரு, தருமபுரி சாலை, கொசமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிமுக-வின் தலைமை நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளை பி.சி.வெற்றிவேல் என்பவர் ஒட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.