ஜெயிலை விட மோசம் - 29 ஆண்டுகளுக்கு முன் தப்பிச்சென்றவருக்கு ஏற்பட்ட அவலநிலை
ஸ்திரேலியாவில் 29 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளி கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி வறுமையில் வாடியதால் போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த டார்கோ டேசிக் என்பவர், கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக கடந்த 1992 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் சிறையில் 19 மாதங்களை கழித்த டார்கோ அங்கிருந்து தப்பினார்.
பின்னர் பின் அதே பகுதியில் வீடு மராமத்து பணிகளை செய்து வந்தார். அதேபோல் கடந்த 29 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் சுதந்திரமாக வாழ்ந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 'டெல்டா' வகை கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து ஜூன் முதல் கடந்த 11ம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டது. அந்த நேரத்தில், டார்கோவின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டது.
16 மாதங்கள்சிறை சென்றாலாவது மூன்று வேளை உணவு கிடைக்கும் என எண்ணிய டார்கோ, போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு 29 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து தப்பித்த கதையை கூறினார். சிறைத் தண்டனையை முழுதுமாக அனுபவிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.டார்கோவின் கதையை கேட்ட நீதிபதி, மீதமுள்ள 14 மாத சிறைத் தண்டனையுடன் மேலும் இரண்டு மாதங்கள் சேர்த்து 16 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பளித்தார்.