சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை - 2 மருத்துவமனைக்கு நோட்டீஸ்!
மகளை கள்ளக்காதலனை விட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து தொடர்ந்து கருமுட்டை விற்பனை செய்து வந்த விவகாரத்தில் இரண்டு மருத்துவமைக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொடூரத் தாய்
ஈரோட்டில் 38 வயதுடைய தாய் தனது 16 வயது மகளை கள்ளக்காதலனை விட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு ஈரோட்டை சேர்ந்த 40 வயதுடைய பெயிண்டருடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.
தனியார் மருத்துவமனைகளில் தனது கருமுட்டையை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார் அவர்.
மகளின் கருமுட்டை விற்பனை
இந்நிலையில், கருமுட்டை விற்பனை செய்வதில் தன் மகளையும் ஈடுபடுத்த காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். அதனால் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
சிறுமிக்கு போலி ஆவணங்கள் மூலம் வயதை கூட்டி காட்டி ஈரோடு, சேலம், ஓசூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் 8 முறை கருமுட்டை விற்பனை செய்துள்ளார் இந்த கொடூர தாய்.
அதிரடியாக கைது
ஒரு கட்டத்தில் தாயின் ஆண் நண்பரால் சிறுமிக்கு தாங்க முடியாத தொல்லை ஏற்பட்ட நிலையில் சேலத்தில் உள்ள உறவினர் மூலம் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகாரளிக்க, சிறுமியின் தாய், அவரின் கள்ளக்காதலன், உடந்தையாக இருந்த புரோக்கர் மாலதி ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் வயதை ஆதாரில் கூட்டி காட்டிய ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கருமுட்டை விற்பனை தொடர்பாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.