மாணவிகளிடம் அத்து மீறும் ஆசிரியர்கள் - ஈரோட்டில் பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் பள்ளி மாணவிகளின் பாலியல் புகார்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
இதுவரை கோவை மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் 2 மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ரணமே ஆறாத நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில், +2 மாணவிகளுக்கு, உயிரியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் தான் திருமலை மூர்த்தி. இவர், மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது தவறான முறையில் தொட்டு பேசுவதாகவும், இரட்டை அர்த்தங்களுடன் பேசுவதாகவும், நடனம் ஆட சொல்லி வற்புறுத்துவதாகவும் அவரிடம் பயின்ற 3 மாணவிகள் 1098 சைல்டு ஹெல்ப் லைன் எண்ணில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள், குற்றச்சாட்டை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, ஆசிரியர் திருமலை மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என பலரும் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுக்கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியரை பணியில் இருந்து நீக்கியுள்ளது பள்ளி நிர்வாகம். ஆனாலும் பள்ளியின் முன்பு மாணவிகளும், மாணவிகளின் பெற்றோர்களும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.