ஈரோடு இடைத்தேர்தல் : கலையும் ஓபிஎஸ் அணி , இபிஎஸ் அணிக்கு தாவிய ஓபிஎஸ் நிர்வாகிகள் காரணம் என்ன?
ஈரோடு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல்:
ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் அணி சார்பாக தென்னரசு போட்டியிடுகின்றார்.இவருக்கு ஆதரவாக அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் , முன்னாள் அமைச்சர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளனர்.
இபிஎஸ் அணிக்கு தாவல்
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். அதன்படி, ஓபிஎஸ் அணியில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் தங்கராக் பழனிசாமி ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர். சேலத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இணைந்தனர்
மேலும், ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முருகன், வர்த்தக அணி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரும் அணி மாறினர். ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அனைவரும் விரைவில் பழனிசாமி அணிக்கு வருவார்கள் என அணி மாறியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் 106 நிர்வாகிகள் பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாகவும் முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.திடீரென ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி இபிஸ் அணிக்கு ஒட்டு மொத்தமாக 106 நிர்வாகிகள் மாறியது ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.