ஜப்பான் பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த ஈரோடு இளைஞர்
Erode Man Marries Japanese Woman in Tamil Tradition- ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஜப்பான் பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலாச்சாரங்களை இணைத்த திருமணம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி- காஞ்சனா. இவர்களது மகன் பரத்குமார் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அப்போது, டோக்கியோவைச் சேர்ந்த ஹிடெடோஷி இஷிசுகா - கெய்கோ இஷிசுகா தம்பதியினரின் மகள் ஹரூமி இஷிசுகாவுடன் பரத்குமாருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் தங்களது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்து முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, சென்னிமலை அடுத்த மேற்கு புதுப்பாளையத்தில் உள்ள செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் மணமகன் பரத்குமார் பட்டு வேட்டி, சட்டை, ஹரூமி இஷிசுகா சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்து, தமிழ் பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து கெட்டிமேளம் முழங்க மணமகன் பரத்குமார், மணமகள் ஹரூமி இஷிசுகாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
மேலும், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட அனைத்து தமிழ் திருமண சடங்குகளையும் ஜப்பான் மணமகள் ஆர்வத்துடன் செய்தார்.
இந்த விழாவில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்தியாவில் நிலவும் எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு IBC Tamil