'சேரி' விவகாரம்: குஷ்பு கூறியது தப்பாக இருப்பதாக தெரியவில்லை - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
சேரி விவகாரம்
அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு "திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள்.
அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேசமுடியாது என்று பதிவிட்டார். அவரின் அந்த பதிவில் 'சேரி மொழி' என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு. இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் எதிர்வினைகள் எழுந்தன. மேலும், காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
இந்நிலையில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம் "நடிகை குஷ்பு சேரி சம்பந்தமாக பேசியது குறித்து உங்களது கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் "நான் அதைப்பற்றி ஒண்ணும் கூற விரும்பவில்லை. எனக்கு ஒன்றும் அதில் தப்பாக இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு அவருடைய பேச்சின் முழு விவரம் தெரியவில்லை.
மேலும் பேசிய இளங்கோவன் "5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. குறிப்பாக 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.