ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு; அதிமுக - திமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் பெரியண்ணா வீதியில் திமுக - அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
இந்த நிலையில் இன்று பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தி ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
கடந்த 4 மணி நேரத்தில் மட்டும் 63,469 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்துள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக - அதிமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு
ஈரோடு கிழக்கு தொகுதியின் பெரியண்ணா வீதியில் திமுக - அதிமுகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்திருந்ததாக தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்ற அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.