ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு; வாக்காளர்கள் சாலை மறியல்
ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கருங்கல்பாளையம் பகுதியில் வாக்காளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
இந்த நிலையில் இன்று பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தி ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
கடந்த 4 மணி நேரத்தில் மட்டும் 63,469 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்துள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர்கள் சாலை மறியல்
இதனிடையே கருங்கல்பாளையம் பகுதியில், உள்ள வாக்குச்சாவடி எண் 148 ல் வாக்காளர்களை முறையாக வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி 20க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்பாக சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
அந்த வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் பெண்கள், முதியோர்களை காக்க வைப்பதாக தெரிவித்த அவர்கள், இதனால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.