ஈரோடு இடைத்தேர்தல்; ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பார் - ஜக்கம்மா சொல்லிவிட்டார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பார் என ஜக்கம்மா சொல்வதாக குடுகுடுப்பைகாரர் அமைச்சர் முன்னிலையில் கூறியதால் திமுகவினர் குஷியடைந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா, மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து காலியாக உள்ள அத்தொகுதியில் பிப்-27இல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில், போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் கடந்த ஜன-31 முதல் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 96 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் (திமுக கூட்டணி ), தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
இதில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களின் வேட்பு மனு என்பது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர்
வாக்குப்பதிவுக்கு 17 நாட்கள் உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதில் பிரசாரம் என்பது களைக்கட்டியுள்ளது.
ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அதிமுக,தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடுகுடுப்பைக்காரர் சொன்ன செய்தியால் குஷியான திமுகவினர்
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருடன் வந்த குடுகுடுப்பைக்காரர் சொன்ன வாக்கு மற்ற கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த குடுகுடுப்பைக்காரர், இந்த தொகுதியில் கை சின்னத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பார் எனவும், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு தொழில் வளர்ச்சி பெருகியிருக்கு ஜக்கம்மா சொல்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த பிறகு கொள்ளை இல்லா ஆட்சி நடப்பதாக ஜக்கம்மா சொல்வதாக அந்த குடுகுடுப்பைகாரர் கூறினார்.