பாஜகவை விட்டு விலகியதற்கு இபிஎஸ் அனுபவிப்பார்...டிடிவி தினகரன்
பாஜகவிற்கு நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி நிச்சயம் தண்டனை அனுபவிப்பார் என அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு
அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆகியோருக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது குற்றம்சாட்டி, எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றார்.
தொடர்ந்து விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சி அமைப்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.
அமமுக சேராது
எடப்பாடி பழனிசாமி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, பாஜக உதவியால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினார் என்றும் அவர்களின் உதவியால் தான் கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆகினர் என்ற டிடிவி, ஆனால் தற்போது பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை ஈபிஎஸ் அனுபவிப்பார் என்றார்.
பாஜகவை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி யாரோடு மெகா கூட்டணி அமைக்க போகிறார் என்று கேள்வி எழுப்பிய தினகரன், அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல் சிதற போகிறது என விமர்சித்தார்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தியிடம் பேசி நியாயமான முறையில் நடந்துகொள்ள அறிவுரை வழங்க வேண்டும் என கூறி, ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் சென்று இணைந்தாலும் அமமுக இணையாது என உறுதிபட கூறினார்.