மரியாதை செலுத்த வந்த ஓபிஎஸ் - பெரியார் படத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இபிஎஸ் ஆதரவாளர்கள்
தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அவரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் மரியாதை
சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
இதே போல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தந்தை பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவருடன் ஏராளமான தொண்டர்கள் வந்தனர். அந்த இடத்திற்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்து வந்துள்ளார்.
இதை அறிந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்த தந்தை பெரியாரின் படத்தை கையோடு எடுத்துச் சென்றனர்.
முகம் சுழிக்க வைத்த இபிஎஸ் ஆதரவாளர்கள்
இதனால் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்த முடியாமல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவித்தனர். இந்த நிலையில் அங்கு வந்த அமமுகவினரிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரியார் படத்தை தரும்படி கேட்டுள்ளனர். பின்னர் அமமுகவினர் படத்தை கொடுத்துள்ளனர்.
பின்னர் ஓபிஎஸ் பெரியாரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
ஓபிஎஸ் வருவதை அறிந்து இபிஎஸ் ஆதரவாளர்கள் பெரியாரின் புகைப்படத்தை எடுத்துச் சென்ற செயல் அரசியல் வட்டாரத்தில் முகம் சுழிக்க வைத்துள்ளது.