திமுக மீதான குற்றங்களை மறைப்பதற்கே மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி கண்டனம் !
குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்
மு.க. ஸ்டாலின் கடிதம்
ஆளுநர் ஆர்.என் ரவி மீது புகார் தெரிவித்து அண்மையில் 15 பக்கங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் அதிமுக அமைச்சர்கள் குறித்து எழுதியதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அந்த அறிக்கையில் "தனது குடும்பத்தின் மீதும் சக அமைச்சர்கள் மீதும் உள்ள குற்றங்களை மறைப்பதற்கே ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்ததற்கான பலனை இப்போது தமிழக மக்கள் அனுபவிக்கின்றனர்.
ஊழல் சேற்றில் புரளுவதையே தொழிலாகக் கொண்ட ஊழலின் ஊற்றுக் கண்ணான தி.மு.க., அதன் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், மற்றவர்களைப் பார்த்து ஊழல்வாதிகள் என்றும், குற்றவாளிகள் என்றும் புலம்பித் திரிகின்றனர். மு.க. ஸ்டாலின், தன் கட்சியினர் வாக்களிக்காமல் தேர்வான மேதகு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் யார் காலில் விழுந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், அந்தக் கடிதத்தில் எங்கள் மீது விழுந்து பிராண்டுவதை அனுமதிக்க முடியாது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ரகசிய கடிதத்தில், “குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்" என்ற தலைப்பில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நஞ்சை கக்கி இருக்கிறார்.
எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோர் மீது, தனது ஏவல் துறையைவிட்டு பொய் வழக்கு போட்டுவிட்டு, இவரே நீதிபதியாக மாறி, குற்றம் சுமத்தியவர்களை 'குற்றவாளிகள்' என்று குறிப்பிட்டு ஒரு மோசடி அரசியலை செய்யும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினை கடுமையாகக் கண்டிக்கிறேன்”. என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.