கோவிலை கண்டாலே திமுகவிற்கு கண் உறுத்துகிறது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவதை மக்கள் சதிச்செயலாக பார்க்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு நடந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், "திமுக கூட்டணி பலமாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் கூட்டணியை நம்புகிறார். நாங்களோ மக்களை நம்பியிருக்கிறோம்.
திமுக கூட்டணியில்தான் பிரச்னை உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத அளவுக்கு தேய்ந்து வருகிறது. அக்கட்சியின் முத்தரசன் மு.க.ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவர் சண்முகம், மக்கள் பிரச்னையை திமுக தீர்க்கவில்லை என்கிறார். இப்படியே போனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிறார்.
திமுக கண்ணை உறுத்துகிறது
எங்கள் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், அதிமுகதான் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமித்ஷா கூறி விட்டார். ஆக எங்கள் கூட்டணி தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்.
கோயில்களை கண்டாலே திமுகவுக்கு கண் உறுத்துகிறது. அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். மக்கள் உண்டியலில் பணத்தைப் போடுவது கோயிலை அபிவிருத்தி செய்வதற்குத்தான்.
நாங்கள் அனைத்துக் கல்லூரிகளையும் அரசு பணத்தில்தான் கட்டினோம். அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுவது நியாயமா? ஏன் அரசு பணத்தில் கல்லூரி கட்டக் கூடாதா. இதை சதி செயலாக மக்கள் பார்க்கிறார்கள்" என பேசினார்.