தைரியமாக கள்ளச்சாராய விற்பனை; திமுக அரசு வெட்கப்பட வேண்டும் - இபிஎஸ் காட்டம்
திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கள்ளச்சாராய விற்பனை
மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?
"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
போதாக்குறைக்கு, "திமுக கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?
கட்சி அடையாளம் லைசன்ஸ்
தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே?
உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.