அதிமுகவின் மாநாட்டை கண்டு திமுக அஞ்சுகிறது - எடப்பாடி பழனிசாமி
மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருந்தாலும், அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அதிமுக மாநாடு - திமுக உண்ணாவிரத போராட்டம்
வரும் 20-ஆம் தேதி அதிமுக சார்பில் மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பெரும் முன்னெடுப்பை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மும்முரம் காட்டி வரும் நிலையில், நேற்று நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடைபெறும் என திமுக அறிவித்தது.
அதிமுக கடும் கண்டனம்
இதற்கு அதிமுகவை சேர்ந்தவர்களை பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது திமுகவின் காழ்ப்புணர்ச்சி என கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.தற்போது இது குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
திமுக அஞ்சுகிறது
செய்தியாளர்களை சந்திக்கும் போது, இது குறித்து பேசிய அவர், இந்த மாநாட்டை கண்டு பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார் என குறிப்பிட்டு, இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் என்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர், இப்போது 2 ஆண்டுகள் உருண்டோடி, 3வது ஆண்டு நடக்கிறது இருப்பினும், இவ்வளவு நாட்கள் என்ன முயற்சி எடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளையும் அதிமுக தான் எடுத்தது என தெரிவித்த எடப்பாடி, 10 ஆண்டுகள் ஆனாலும் திமுகவால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருந்தாலும், அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி, ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.