முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் - இபிஎஸ் விமர்சனம்
பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகள் அப்பா என கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக மாநாடு
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று(16.02.2025) அதிமுக இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறை சார்பில் லட்சிய மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "ஒரு கட்சி வலுவாக இருப்பதற்கு அக்கட்சியில் இளைஞர்கள் அதிகமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்டிருக்கும் கட்சி அதிமுகதான்.
இருமொழி கொள்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னுடைய அறிக்கைகள் பாஜகவின் அறிக்கைகள் போல இருப்பதாகச் சொல்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்தக் காலத்திலும் அதிமுக யாரை நம்பியும், யாரை ஒட்டியும் அரசியல் செய்தது இல்லை. எங்களை நாடிதான் அனைவரும் வருவார்கள்.
முதல்வர் ஸ்டாலின் வெளியே செல்லும்போது, இளைஞர்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக சொல்லியுள்ளார். குழந்தைகளும், பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போது ‘அப்பா.. அப்பா..’ எனக் கதறுகிறார்களே அந்தச் சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா என மக்கள் கேட்கிறார்கள். தமிழகத்தில் 2025 ஜனவரி முதல் பிப்ரவரி 14 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய கல்விக்கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழகத்துக்கு நிதி விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. இது சரி இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் கடைபிடிக்கப்படும். அதில் எந்தவித மாற்றத்துக்கும் இடமில்லை. மும்மொழிக் கொள்கையை அதிமுக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களை பார்த்து நிதியை வழங்குங்கள்.
வெள்ளை குடை வேந்தர்
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும். திமுகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது? 1999 பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. 5 ஆண்டுகள் காலம் முடிந்ததும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. பாஜக மற்றும் காங்கிரஸோடு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்த ஒரே கட்சி திமுக. அதிகாரத்திற்கு வருவதற்கு எதை வேண்டுமானாலும் திமுகவினர் விட்டுக்கொடுப்பார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘கோ பேக் மோடி’ கருப்பு பலூன் எல்லாம் இருந்தது. ஆளும் கட்சியானதும் ஊழல் குற்றச்சாட்டுகளால், ‘வெல்கம் மோடி’ வெள்ளை குடை வந்துவிட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கு வெள்ளை குடை வேந்தர் எனப் பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்." என கூறினார்.