திமுக கூட்டணியில் காங்கிரஸ் கை நழுவி போகப்போகிறது - எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா என்ற கேள்வி வந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் புறநகர் மாவட்ட மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரப்பட்டி பள்ளம் பகுதியில் 108 பானையில் பொங்கல் வைத்து அதிமுக சார்பில் பொங்கல் விழா கொண்டப்பட்டது.

இந்த விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பானையில் பச்சரிசி இட்டு தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் அந்த நிகழ்வில் பேசிய அவர், " எங்கள் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இன்னும் சில கட்சிகள் சேரப்போகின்றன.
எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றி கூட்டணி, அதிமுக கூட்டணி மீண்டும் பெற்று ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அடுத்த தைத் திருநாளை ஆளும் கட்சியாக இருந்து கொண்டாடுவோம்.
மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். திறமையற்ற முதல்வர் இருக்கிற காரணத்தினால் மக்கள் நிம்மதியாக இல்லை.
கை நழுவும் காங்கிரஸ்
அரசு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் இல்லாத நாளே இல்லை. தமிழகம் போராட்டம், போராட்டம் என போராட்ட களமாக மாறி வருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கிராமம் முதல் நகரம் வரை போதைப்பொருள் விற்பனை நடக்கிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கை நழுவி போகப்போகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா என்ற கேள்வி வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.