மருந்து சாப்பிடறேன்; 70 வயது ஆகிடுச்சு - நீதிமன்றத்தில் இபிஎஸ் கோரிக்கை!
அவதூறு வழக்கில் ஆஜராவதில் விலக்கு அளிக்க எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தயாநிதி மாறன் எம்.பி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, இபிஎஸுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை தயாநிதி மாறன் தொடர்ந்தார். அதன் அடிப்படையில், நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆஜராவதில் விலக்கு?
அப்போது சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தனது வழக்கறிஞர் படையுடன் நேரில் ஆஜரானார். அதில், அடுத்து வரும் விசாரணைகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“எனக்கு 70 வயது ஆகிவிட்டது. மூத்த குடிமகன் என்பதாலும், அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாலும், முன்னாள் முதல்வர் என்கிற அடிப்படையிலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீதித் துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது.
உடல்நல பாதிப்பு காரணமாக மருந்து எடுத்து வருகிறேன். அதே சமயம் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கமோ அல்லது இழுத்தடிக்க வேண்டிய எண்ணமோ இல்லை.
ஆகவே, தனக்கு அடுத்த கட்ட விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயவேல், விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.