கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கிய இபிஎஸ் - செங்கோட்டையன் சொன்ன பதில்
செங்கோட்டையன் அதிமுகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
கெடு விதித்த செங்கோட்டையன்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சமீபகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை 10 நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் நாங்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினோம். அவர் அந்த கருத்தை ஏற்கவில்லை. 10 நாட்களில் கட்சியில் இணைக்காவிட்டால், ஒத்த கருத்து உடையவர்களை ஒருங்கிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என தெரிவித்தார்.
செங்கோட்டையனின் இந்த பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்
இந்நிலையில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், செங்கோட்டையனை அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/BgB5kMOnpH
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) September 6, 2025
மேலும், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சி பதவிகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது குறித்து பதிலளித்த செங்கோட்டையன், "தர்மம் வெல்ல வேண்டும்; கட்சிப்பதவியை பறித்ததற்கு வேதனை இல்லை. மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.