"பழிவாங்குகிறாயே உன் பெயர் திமுகவா? வெறுங்கையோடு சென்றாயே மறந்தாயோ" - ஓபிஎஸ்-இபிஎஸ் விமர்சனம்

ops dmk eps cmstalin
By Irumporai Jan 20, 2022 09:51 AM GMT
Report

அதிமுக சார்பில் ஓபிஎஸ், எடப்பாடி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையால், ''அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோரக் கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது திமுக அரசு. அரசியல் பழிவாங்கல் செய்யும் உன் பெயர் திமுகவா?.

ஏற்கெனவே 5 முன்னாள் அமைச்சர்கள் இடங்களில் சோதனை என்ற பெயரில் சட்ட மீறல் நடத்திய திமுக, வெறுங்கையோடு திரும்பிய நிகழ்வை மறந்து, மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை என்ற சட்ட மீறலை இன்று நடத்திக் கொண்டிருக்கிறது. சாமானிய மக்கள் அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினால் வழக்குப்பதிவு.   

அதற்கும் ஒருபடி மேலே சென்று சமூக வலைதளங்களில் ஆளும் கட்சியினரை எதிர்த்துக் குரல் எழுப்பினால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம். அதிமுக தலைவர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், லஞ்ச ஒழிப்புத்துறை எனும் ஆயுதத்தைத் தொடர்ந்து திமுக அரசு இயக்கிக் கொண்டிருக்கிறது.

மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயத்திலும் முனைப்பு காட்டாத திமுக அரசு, அரசியலில் தனக்கு மிகப்பெரிய பின்னடைவு வருகின்றபோது, அதனை மறைத்து அரசியல் சூழ்நிலைகளை திசை திருப்ப, தந்தையார் வழியில் தனயனும் முயற்சி செய்கிறார்.

இலவு காத்த கிளியாக 10 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலிக்காக காத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அந்த இருக்கை கிடைத்த உடனே, எதிர்க்கட்சியாக இருந்தபோது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மக்களுக்கு பெரும் துயரத்தைக் கொடுத்தோம் என்பதையெல்லாம் மறந்து, இன்றைக்கு மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தருமபுரி மாவட்ட எம்எல்ஏ தேர்தலில் ஒரு தொகுதி கூட திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைக்கவிடாமல் செய்த, சமரசம் இல்லா சமரன் அன்பழகனை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கைதான்.  

மக்களை ஏமாற்றிப் புறவாசல் வழியாக ஆட்சியில் அமர்ந்து 8 மாதங்கள் ஆகியும் இந்த திமுக அரசு, மக்களுக்கு பிரதானமாக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்டாமல், ஏற்கெனவே ஜெயலலிதா அரசு தமிழக அரசை முன்னணி மாநிலமாகப் பல துறைகளில் வைத்திருந்த அதே நிலைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக உங்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, தமிழகமெங்கும் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர் வழிவந்து அவரின் பாசறையில் பயின்றவர்கள் நாங்கள்.   அஞ்சிப் பிழைக்கவும், அண்டிப் பிழைக்கவும், சுரண்டிப் பிழைக்கவும் எந்தவித தேவையும் எங்களுக்கு இல்லை. காரணம் இது, பல சோதனைகளையும், பல இயக்கப் பிளவுகளையும் கண்டு வென்ற மிகப்பெரிய ஆலமரம். இதை திமுக ஒருபோதும் சாய்த்துவிட முடியாது.

நீங்கள் நடத்தக்கூடிய ஒவ்வொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் நாடகமும் எங்களுக்கும், எங்கள் இயக்கத் தலைவர்களுக்கும், இந்த இயக்கத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் மேலும் வலுவும், உரமும் ஊட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எம்ஜிஆர் பாசறையிலும், ஜெயலலிதாவின் பள்ளியிலும் ஒழுக்கமான கல்வியைப் பயின்றவர்கள் நாங்கள். தேசத்தின் நலனும், தமிழகத்தின் வளர்ச்சியும் மட்டுமே எங்களுக்குப் பிரதானம் என்று எண்ணி எங்களுடைய அரசியல் பயணத்தைத் தொடர்வோம்.

ஆட்சிக் கட்டிலில் ஏறி குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஊர்தியைப் பங்குபெற வைக்க முடியாத திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய நிர்வாகத் திறமை இன்மையை மறைக்கவே தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதற்கு எங்களது கண்டனங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.