கோடநாடு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு- தரையில் அமர்ந்து தர்ணா
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 14-ம் தேதி உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்காக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூடியது.
அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி அளித்ததும், "கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறு விசாரணை செய்வது எதற்கு?" என, எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கையில், "இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல அதிமுகவினர் செயல்படுகின்றனர். இந்த வழக்கில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்படும். நீதிமன்ற அனுமதியுடன் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது" என பேசினார்.
இதையடுத்து, அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் வெளிநடப்பு செய்த அதிமுகவினர், கலைவாணர் அரங்குக்க்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் போலீஸார் நேற்று மறுவிசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம், சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்துள்ளது.