ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்கு என்ன ஆச்சு ? தமிழக அரசை கேள்விகளால் துளைத்த எடப்பாடி!
தமிழகத்தில் மீண்டும் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கை என தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார் .
எடப்பாடி பழனிசாமி
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையக்கூடாது என்று, 200 யூனிட் மற்றும் 750 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு. நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன.
மேலும், பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளில், 10 சதவிகிதம் வீடுகள் நெசவாளர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்து, பிப்ரவரி 2018 முதல் கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மானியத்துடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
ஆனால், கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில் இதுவரை நெசவாளர்களுக்கு எந்தத் திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டித் தரப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுக அரசில் விலையில்லா வேட்டி, சேலை; பள்ளி மாணவர்களுக்கான சீருடை போன்றவை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், இந்த திமுக ஆட்சியில் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழக நெசவாளர்களுக்கு குறித்த நேரத்தில் தரமான நூல்கள் வழங்கப்படுவதுமில்லை.
பட்டுத் தறி நெசவு செய்பவர்களுக்கு, அதிமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை தறி வைத்துள்ளனரோ, அத்தனை தறிகள் மூலம் நெய்யும் பட்டுப் புடவைகளுக்கும் முழுமையாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தறிக்கேற்றவாறு முழுமையாக ஆர்டர்கள் வழங்கப்பட்டது.
திமுக ஆட்சி
ஆனால், திமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் ஆர்டரே தருவதில்லை. நெசவாளர்கள் வைத்திருக்கும் அனைத்து தறிகளிலும் நெய்த பட்டுப் புடவைகளுக்கான ஊக்கத் தொகையும் வழங்குவதில்லை என்று பட்டு நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, தொடர்ந்து பட்டு நெசவாளர்கள் நெய்த பட்டுப் புடவைகள் அனைத்துக்கும் ஊக்கத் தொகை வழங்குமாறு வலியுறுத்துகிறேன். அதிமுக அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களினால், தமிழகத்தில் நெசவுத் தொழில் காக்கப்பட்டது.
ஆனால் இன்று, குடிசைத் தொழில்போல் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து நெசவுத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின், தறிக் கூடங்களை அளவெடுத்து தொழில் வரி விதிக்க முனைந்துள்ள ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, உடனடியாக தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும், கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்கு பெற்று,
மீண்டும் தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.