திமுக கொடி குற்றம் செய்ய லைசென்ஸா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

M K Stalin DMK Chennai Edappadi K. Palaniswami
By Karthikraja Jan 29, 2025 10:40 AM GMT
Report

 பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈ.சி.ஆர் சாலை

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, வீடு வரை துரத்தி சென்றுள்ளனர். 

chennai ecr

இந்த பெண்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வீடியோ காட்சி மூலம் வாகன எண்ணை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதாக திமுக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது. 

எடப்பாடி பழனிசாமி

அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர். 

திமுக கொடி

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? 

குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா? #யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த திரு. ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்? 

ஸ்டாலின் மாடல்

மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். 

இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.