89-இல் ஜெயலலிதா மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது - இபிஎஸ் ஆவேசம்
கடந்த 1989-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கொடுரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் பேச்சு
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989-ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி திமுக என ஆவேசமாக பேசினார்.
எடப்பாடி கருத்து
வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்தித்த அவர், கடந்த 1989-ஆம் ஆண்டு, சட்டப்பேரவையில் கொடூரமான முறையில் பெண் என்றும் பாராமல் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல், கருணாநிதி தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டது என குறிப்பிட்டு, அப்போது, ஜெயலலிதாவின் சேலையை தற்போதைய மூத்த அமைச்சர் ஒருவர் பிடித்து இழுத்தார் என்றும் கூறினார்.
அது போன்ற ஒரு நிகழ்வு சட்டமன்றத்திலேயே நடைபெறவில்லை என குறிப்பிட்ட எடப்பாடி, தற்போது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழக முதல்வர் ஒரு பொய்யான தகவலை பரப்புகிறார் என்றும் அவருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என எச்சரித்தார்.