விவசாயியின் மனிதாபிமானமும் பக்தியும் - எலியை பிடித்து வந்து விநாயகருக்கு பூஜை செய்த மனிதர்
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் கொப்பா தாலுகாவில் உள்ள மார்சல் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வாழ்ந்து வருகிறார். இவரது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார்.
நெல் வயலில் எலி தொல்லைகள் அதிகமாக இருந்து வந்தது. அந்த எலிகள் பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது. அந்த எலிகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார் விவசாயி ரமேஷ். எல்லாரும் அந்த எலிகளை கொன்று விடுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால், அந்த விவசாயி ரமேஷுக்கு அந்த எலிகளை கொல்ல மனசு இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி வந்தது.
இதனையடுத்து, வயலில் அட்டகாசம் செய்து வந்த எலிகளில் ஒரு எலியை பிடித்து பையில் போட்டுக் கொண்டு போய் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை முன்பாக பையை வைத்து நெல் வயலில் உள்ள எலிகளை நெல்லை நாசம் செய்யாமல் நீ தான் காக்க வேண்டும் விநாயகா என்று மனமுருகி வேண்டிக் கொண்டுள்ளார். பின்னர் பையை திறந்து விட்டார்.
பையைத் திறந்ததும், அதிலிருந்த எலி வெளியில் ஓடி ஒளிந்து கொண்டது. விவசாயி ரமேஷின் இந்த மனிதாபிமானத்தையும், பக்தியையும் கோவிலுக்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டு சென்றார்கள்.