திருமணத்தில் விருந்து உணவு வீணானதால் விரக்தி - வராதவர்களிடம் பில் அனுப்பி அபராதம் கேட்ட மணமக்கள்
யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் விருந்து உணவு வீணாகிப் போனதால், திருமணத்திற்கு வராதவர்களிடம் ரூ. 17 ஆயிரம் அபராதம் கேட்டு மணமக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வளவு பேர் திருமணத்திற்கு வருவார்கள், இவ்வளவு பேர் உணவு சாப்பிடுவார்கள் என்று கணக்கிட்டு திருமண விருந்து தயார் செய்யப்படும். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் இந்த திருமண விருந்து மிச்சமாகிவிடும்.
இதனால் தெரிந்தவர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும், அனாதை விடுதிகளுக்கும் , முதியோர் இல்லங்களுக்கும் அந்த உணவு அனுப்பி வைக்கப்பட்டு விடும். சிலர் திருமணத்திற்கு வராமல் இருப்பார்கள். வந்தவர்களிலும் சிலர் சாப்பிடாமல் சென்று விடுவார்கள்.
இதனால், விருந்து உணவு வீணாகி போய்விடும். ஆனால், ஸ்டார் ஓட்டல்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து அவர்களுக்கு மட்டுமே விருந்துக்கு டேபிள் ஒதுக்கும் வழக்கம் உள்ளது. அப்படி 2 பேருக்கு டேபிள் அட்வான்சாக ஒதுக்கப்பட்டு கடைசி வரைக்கும் அவர்கள் வராததால் அந்த டேபிள் விருந்து செலவு அனைத்தும் வீணாகி உள்ளது.
இதை அடுத்து அதற்கான நஷ்ட ஈட்டை விருந்துக்கு வராதவர்களிடம் 17 ஆயிரம் 530 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மணமக்கள் கேட்டுள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்த டக் – டெட்ரா சிம்மன்ஸ். இவர்கள் இருவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. ஜமைக்காவில் உள்ள தனியார் விடுதியில் இந்த திருமணம் நடந்துள்ளது.
இத்திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விருந்து வைக்க அந்த தனியார் விடுதியில் தனித்தனியாக டேபிள் அட்வான்ஸ் ஆக புக் செய்யப்பட்டது. இதில் 2 பேர் மட்டும் அந்த திருமணத்திற்கு கடைசி வரைக்கும் வரவில்லை. அவர்கள் திருமணத்திற்கு வர முடியவில்லை என்ற தகவலையும் கடைசி வரைக்கும் சொல்லாமல் இருந்துள்ளனர்.
இதனால் கடைசி வரைக்கும் அவர்களுக்காக அந்த டேபிள் ஒதுக்கப்பட்டு வீணாக பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை வந்தது. எந்த செலவும் செய்யாமல் பில் கட்டிய மணமக்கள் விரக்தியானார்கள். இதனால், உரியவர்களிடம் அந்த பணத்தை பெற்று விட அவர்கள் நினைத்துள்ளனர்.
தங்கள் திருமணத்திற்கு வருவதாக சொன்னதன் பேரில் தான் டேபிள் புக் செய்தோம். ஆனால், வரவில்லை வர முடியவில்லை என்ற தகவலையும் கடைசி வரைக்கும் நீங்கள் தெரிவிக்கவில்லை.
அதனால், நஷ்ட ஈடு 240 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 17 ,530) உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் பில்லினை அனுப்பி உள்ளனர். இந்த பில் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மணமக்கள் செய்தது சரிதான் என்று பலரும் கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.