‘மீனு வேணுமா... கறி வேணுமா... கட்டளையிடுங்கள் எஜமான்’ - கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வரும் நாய்!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாஸ் பெர்னான்டஸ் (54). தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வருகிறார்.
4 வயதாகும் இந்த நாய்க்கு ‘ஜேக் ஸ்பேரோ’ என்று பெயர். இந்த ‘ஜேக் ஸ்பேரோ’ நாய் உரிமையாளர் என்ன வாங்கி வர சொன்னாலும் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவது வழக்கமாக வைத்துள்ளது.
வீட்டிற்கு தேவையான மளிகைபொருட்கள், காய்கறிகள், பால், சிக்கன், மட்டன் ஆகியவற்றை ஒரு சீட்டில் எழுதி சீட்டையும், பணத்தையும் ஒரு கூடையில் வைத்து நாயிடம் கொடுத்தால் கடைக்கு சென்று சரியான பொருட்கள் மற்றும் மீதிபணத்தையும் வாங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாய் ஜேக்ஸ்பேரோ அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே சென்று வருவதால் அப்பகுதி மக்களிடம் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக, தினமும் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வரும் ஜேக்ஸ்பேரோ நாய் உழவர் சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நல்ல நண்பனாக மாறி வருகிறது.