பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவிருக்கும் ஒரே படம் - ஹீரோ யார் தெரியுமா?
வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு மற்றொரு படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடல், தியேட்டர்களில் 50% இருக்கை வசதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகவிருந்த அஜித்தின் வலிமை, ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்., விஷாலின் வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன. இதனால் அஜித்தை திரையில் காண மூன்று ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கின்றது.
இதனையடுத்து புதிதாக ஒரு படம் பொங்கலுக்கு திரையில் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த டிசம்பர் முதல் வாரமே இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்தது.
ஆனால் அப்போது நடந்த படவிழாவில் அஷ்வின் பேசிய விதம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. அவ்வேளையில் இப்படம் வெளியானால் சரியாகஇருக்காது என்று கருதிய படக்குழு என்ன சொல்ல போகிறாய் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தது.
தற்போது பொங்கலுக்கு எந்த பெரிய படமும் திரையரங்கில் வெளியாக வாய்ப்பில்லாததால் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.