பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து... டி20 போட்டியில் அசத்தல் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் 59 ரன்கள் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சதாப் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று ஆடாததால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.