141 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்: அசால்டாக ஜெயித்த இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் ஃபாகர் சமான் 47 ரன்கள் விளாச மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் 35.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் சகிப் முகமது 4 விக்கெட்டுகளையும் கிரேக் ஒவர்டான், பார்க்கின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 21.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.