அடிமேல் அடிவாங்கும் பாகிஸ்தான் - நியூசிலாந்தை அடுத்து கம்பி நீட்ட தயாராகும் இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முடிவில் இருந்து இங்கிலாந்தும் பின் வாங்கியுள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளும், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கவிருந்தது. இதில் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அதற்கு சில மணி நேரங்கள் முன்பு பாதுகாப்பு காரணங்களை காட்டி தொடரில் இருந்து பங்கேற்காமல் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து ரத்து செய்தது.
இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கூறுவது தவறுதான், ஆனால் வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இதனிடையே நியூசிலாந்து அணி கொடுத்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாகிஸ்தான் அணி மீளாத சூழலில் இங்கிலாந்து அணி வரும் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. 2005ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தின் பாதுகாப்பு குழுவினர் பாகிஸ்தானின் நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர் என்றும், 2 நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்திருந்த பாகிஸ்தான் வாரியம், உலகின் சிறந்த உளவுத்துறை எங்கள் நாட்டில் உள்ளது.
அனைத்து நாட்டு அணிகளுக்கும் வழங்கக்கூடிய உச்சக்கட்ட பாதுகாப்பை தான் நியூசிலாந்து அணிக்கு வழங்கினோம். ஆனால் நியூசிலாந்து இதுபோன்று அறிவித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த தொடரை நடத்தி முடிக்கவே பாகிஸ்தான் வாரியம் விரும்புகிறது எனத்தெரிவித்துள்ளது.