மீண்டும் களத்தில் புகுந்து காமெடி செய்த இங்கிலாந்து ரசிகர்- வைரலாகும் வீடியோ
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது களத்திற்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் களத்திற்குள் புகுந்து காமெடி செய்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
சமகால கிரிக்கெட் உலகின் வல்லரசுகளாக திகழும் இந்தியா இங்கிலாந்து இடையேயான இந்த தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமலே நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் அடிக்கடி சீண்டி கொண்டே உள்ளனர். களத்திற்கு வெளியே உள்ள ரசிகர்களும் தங்களது கைகளில் இருக்கும் பொருள்களை மைதானத்தில் உள்ள வீரர்கள் மீது தூக்கியெறிந்தும், நிறவெறியை தூண்டும் சில சொற்களை பயன்படுத்தியும் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஜார்வோ என்னும் இங்கிலாந்து ரசிகர், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு கையில் பந்துடன் களத்திற்குள் புகுந்தார். நானும் இந்திய வீரர் தான் நான் இந்திய அணிக்காக விக்கெட் எடுத்து கொடுக்கிறேன் என கூறிய ஜார்வோவை, மைதான ஊழியர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
ஜார்வோ மைதானத்திற்குள் புகுந்து சிரிப்பை ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியதால், ஜார்வோவும் ஒரே நாளில் உலகளவில் பிரபலமடைந்தார்.
JARVO 69 IS BACK AND READY TO BAT.
— Cricket Mate. (@CricketMate_) August 27, 2021
????????? pic.twitter.com/OLr3r0P0SQ
இந்தநிலையில், லீட்ஸில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் களத்திற்குள் புகுந்த அதே ரசிகர் மீண்டும் காமெடி செய்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்து வெளியேறிய போது, எதிர்திசையில் இருந்து இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு கையில் பேட், தலையில் ஹெல்மெட்டுடன் களத்திற்குள் புகுந்த ஜார்வோ, நேராக ஸ்ட்ரைக் எண்டிற்கே வந்து பந்துகளை எதிர்கொள்ள தயாரானார்.
ஜார்வோவின் இந்த செயலை சற்று தாமதமாக கவனித்த மைதான ஊழியர்கள் உடனடியாக வந்து ஜார்வோவை கூண்டு கட்டாக தூக்கி சென்றனர். ஜார்வோவின் மைதானத்திற்குள் புகுந்த இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருப்பதை கூட மறந்துவிட்டு இந்திய ரசிகர்களே ஜார்வோவின் இந்த வீடியோவை பார்த்து சிரித்து வருகின்றனர்.
He Interrupted Once Again ?#ENGvIND #Jarvo pic.twitter.com/58gr1Zwnt1
— RVCJ Media (@RVCJ_FB) August 27, 2021