டெஸ்ட் தோல்வி எதிரொலி ...மீண்டும் அழைக்கப்பட்ட முக்கிய இங்கிலாந்து வீரர்
இந்திய அணியுடனான 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10ம் தேதி தொடங்க உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
சொந்த காரணங்களுக்காக நான்காவது போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான ஜாஸ் பட்லர் 5வது போட்டிக்கான அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.அதேபோல் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ரோரி பர்ன்ஸும் கடைசி போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.
5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பின்வருமாறு:
ஜோ ரூட் (கேப்டன்), மொய்ன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோனதன் பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஹசீப் ஹமீத், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மாலன், க்ராய்க் ஓவர்டன், ஒலி போப், ஒலி ராபின்சன், கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட்.