மிரட்டிய இந்திய பவுலர்கள்... 183 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் பவுலர்கள் மிரள வைத்தனர்.
இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. கேப்டன் ஜோ ரூட் மட்டும் சிறப்பாக விளையாடி 64 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க தவற முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது சமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.