50 ஓவரில் 498 ரன்களை குவித்து இங்கிலாந்து வரலாற்று சாதனை

Jos Buttler
By Irumporai Jun 17, 2022 02:30 PM GMT
Report

இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஃபிலிப் சால்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். ராய் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஃபிலிப் சால்ட் அடித்து ஆடினார்.

சால்ட்டுடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மலானும் அடித்து ஆட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய சால்ட் 82 பந்தில் சதமடித்தார். 93 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸருடன் 122 ரன்களை குவித்தார் சால்ட். சால்ட்டும் மலானும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர்.

50 ஓவரில் 498 ரன்களை குவித்து இங்கிலாந்து வரலாற்று சாதனை | England Achieves Record Of Highest Odi Score

சால்ட்டை தொடர்ந்து டேவிட் மலானும் சதமடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய ஜோஸ் பட்லர் காட்டடி அடித்து 46 பந்தில் சதமடித்தார். ஜோஸ் பட்லர் சிக்ஸர்களாக விளாசி சிக்ஸர் மழை பொழிந்தார். சதத்திற்கு பின்னரும் அடி வெளுத்துவாங்கினார்.

டேவிட் மலான் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி காட்டடி அடித்தார். 18 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார் லிவிங்ஸ்டோன்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இங்கிலாந்து வீரர் அடித்த அதிவேக அரைசதம் இதுதான். டேவிட் மலான் 109 பந்தில் 125 ரன்களையும், ஜோஸ் பட்லர் 70 பந்தில் 162 ரன்களையும் குவித்தனர். லிவிங்ஸ்டோன் 22 பந்தில் 66 ரன்களை விளாச, 50 ஓவரில் 498 ரன்களை குவித்து சாதனை படைத்தது இங்கிலாந்து அணி.